ABSTRACT
Literature is created for the purpose of enabling human beings to live a wholesome and meaningful life. Yet, when the question “Do they truly live?” is put forward, it often remains unanswered. This is because the ultimate aim of literature is to strengthen human relationships and thereby enrich the family, the society, the village, and the nation. When we speak of relationships, do people really live in unity of thought and action? In fact, each one defines their own needs, morals, and principles, and stands firm in their own direction. How then can such minds, divided and conflicting, be brought together? What words would persuade them to listen? At such moments, it is literature that comes to our great aid. Literature is the supreme remedy, possessing the power to transform the human mind. Therefore, this essay aims to explore human relationships and the challenges within them through one of the branches of literature—poetry.
புதுக்கவிதைகளில் உறவுச்சிக்கல்கள்
முன்னுரை
சிந்தையோடு கூடிய எழுத்துக்களை உருவாக்கத் தொடங்கிய பின்னர் அறிவு வளர்ச்சி பெருவேகம் கொண்டது. ஊர்ந்து பின்னர் நடந்து சென்ற மனிதன் ஓர் இடத்தில் நின்று நிதானித்துச் சிந்தித்ததன் விளைவே இலக்கியம். தான் மேற்கொண்ட பயணத்திலும் அனுபவித்து வாழ்ந்த இயற்கை மற்றும் காதல் வாழ்வினையும் பிறர் அறியும்படி எழுதத்தொடங்கிய பின்னரே இலக்கியம் புதுவேகம் தொட்டது. அதை இன்னும் சீர்படுத்தி மொழியைச் செழுமைப்படுத்தி இன்பத்தை அறத்தோடு இணைத்த பின்னர் இன்று செவ்வியல் இலக்கியம் எனப் போற்றப்படுகிறது. போற்றப்பட்ட, போற்றப்படுகின்ற இலக்கியங்கள் காலந்தோறும் பாடப்படுகின்ற பாடுபொருள்தான் என்ன? எவற்றை முன்னிருத்தி இன்னும் பாடப்படுகின்றன? காய்ந்த மரத்தினில் பற்றி எரிகின்ற நெருப்பு பெருநெருப்பாக மாறுவதுபோல எழுத்தையும் மொழியையும் பற்றிய இலக்கியங்கள் எப்பொருளை, எக்கருத்தைப் பற்றிக்கொண்டு பெருநெருப்பாக,பேரிலக்கியமாக இலக்கியவானத்துள் வளர்கின்றன? எனும் கேள்விகள் காலந்தோறும் கேட்கப்படுகின்றன.
உலகத்துள் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உண்டு உயிர்த்து முடிவில் இறப்பில் முடிக்கின்றன. இது மனிதனுக்கும் பொருந்தும். எனினும் ஒரு சிறுவேறுபாடு யாதெனில் உண்டு உயிர்த்து வாழ்கின்ற மனிதன் மடிவதற்கு முன்பு தன்பகுத்தறிவால் உலகை உணர்ந்து உறவுகளை வலுப்படுத்தப் பலவகையான இலக்கியங்களைப் படைத்திட்டான். அவற்றுள் கவிதையே அன்றுமுதல் இன்றுவரை தலையாய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இலக்கியவடிவங்கள் பற்பல இருப்பினும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற அடிப்படையில் தான்கூறவரும் கருத்துக்களைத் தெற்றெனச் சொல்வது கவிதையே. இதன் பாடுபொருள் பல இருப்பினும் உறவுகள் குறித்தான கவிதையே இன்று பேசுபொருளாகப் பெரும்பாலும் உள்ளது. அவற்றுள் உறவுகள்,உறவுச்சிக்கல்கள் குறித்தான செய்திகளைக் கூறுவதாக இக்கட்டுரையின் மையம் அமைகின்றது.
கலர்வீடியோ
இறப்பென்பது இயல்பானது என்றும் மாறாதது. இதைச் சொல்லுதல் என்பது எளிது. ஆனால் ஒரு இறப்பொன்று நம் இல்லத்தில் நிகழ்ந்துவிடின் தாங்கொணாத் துயரம் அடைவோம். இத்துயரத்தினூடே இழவு வீட்டில் தனக்கு மரியாதையில்லை என்று சண்டையிட்டு மேலும் இழவாக்குவர் சிலர். இச்சண்டைக்குப் பின்புலமாகத் ‘தான்’ என்ற உணர்வுநிலை மட்டுமல்லாது செய்யக்கூடிய இறப்புச் சடங்குமுறைகளில் தனக்கு முன்னுரிமை கொடு;க்கப்படாததன் காரணமே சண்டைக்கு முக்கியக் காரணியாக இருக்கும். அதனால் தன்முனைப்புப் பெருகிய இன்றைய காலத்தில் பணத்தையும் பதவியையும் தேடி புலம்பெயர்தல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணிநிமித்தம், நேரில் வர இயலாமைக்கான பயணதூரம் ஆகிய காரணங்களால் சிற்சில நேரங்களில் தனையீன்ற தாய்தந்தையின் இறப்பிற்குக்கூட வரஇயலாமல் போவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதனை காலத்தின் வளர்ச்சி மற்றும் மாறுபாடு எனச் சொல்லிச் சமாதானமும் அடைகிறோம். அத்துடன் இன்று வராமையை ஏற்றுக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டு மனப்பக்குவமும் அடைந்துள்ளது. முன்னர் சொன்ன காலத்தின் வளர்ச்சியின் உச்சமாக இறப்பின் நிகழ்வை நேரலையாகவே காணும் வாய்ப்பையும் இன்றைய வளர்ச்சி கொடுத்துள்ளது. இக்கால மாற்றத்தின் நிகழ்வைக் கவிஞர் தன்கவித் துளியில்,
“விடுமுறை இல்லை
வீடியோ அனுப்புங்கள்
வாரக்கடைசியில் பார்த்து வருத்தப்பட!
வீடியோ கலரில் இருப்பது உத்தமம்
ஏனெனில்
மலையாள மரணம் பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள் யாரும்” (1)
என்று முடிக்கின்றார். கலாச்சார பண்பாட்டு மாறுபாடுகள் ஒவ்வொரு இடத்திற்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் அவரவர்கள் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப மாறுபடும். எனவே அப்பண்பாடுகளை அறிந்து கொள்வதில் பிறருக்கு ஆர்வம் இருப்பது இயல்பானதே. ஆனால் சகமனிதர் ஒருவரின் மரணத்தைக்கூட இயல்பாய்; ஏற்றுக்கொள்ளுதலும் இழப்புகள் குறித்தான துயரமின்மையும் இன்றி வண்ணங்களற்ற கருப்பு வெள்ளையாய் இருக்கும் இறப்பின் வீட்டில் மரணநிகழ்வுச் சடங்கு கலராய் இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளில் மனிதர்கள் தங்களது மனதைத் தொலைத்துக் கண்களை மட்டும் வண்ணங்களால் நிரப்ப விரும்புவது வாழ்வி;ன் எதார்த்தை வேரறுப்பதாய் உள்ளது.
கதவின் மொழி
அன்னையர் தினமும் நதிகளி;ன் பெயரும் அன்னை பூமியும் என எல்லாவற்றையும் பெண்ணாகவே பார்ப்பினும் ஆண்களால் ஆளப்படும் இவ்வுலகில் பெண் இரண்டாம் நிலையிலேயே இருக்கின்றாள். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இவ்வுலகில் ஒருபெண் சுதந்திரத்துடனோ தனித்துச்செயல்படும் திறனோ பெற்றிருப்பின் ஆண்களின் அடக்குமுறை உடனே பாய்ந்து அவளை நிலைகுலையச் செய்யும். இதனால் பெண்ணானவள் தன்குழந்தை, குடும்பம், பெரியோர், சமுதாயம் ஆகியவற்றுக்குக் கட்டுண்டு அமைதியாகிறாள். இந்த அமைதியே அவளின் அடிமைநிலைக்கு முதல்படியாகிறது. இதனால் தன்சொல், செயல் ஆகியன இழந்து மொத்தத்தில் தன்சுயம் என்பதை இழந்து நிற்கின்றதை ‘தூh’; எனும் கவிதை பின்வருமாறு உணர்த்துகின்றது,
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விசேசமாக நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்கமுங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்குச்சி கோலி கரண்டி
துருப்பிடித்த கட்டையோடு உள்விழுந்த
ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளிடம்ளர்
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறு’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படைவென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச்சொட்ட
அப்பா மேலே வருவார்
இன்றுவரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க! (2)
என்ற நா.முத்துக்குமார் கவிதையில் கிணற்றுச் சேறெடுத்தவர் தன் மனதில் உள்ள பெண்ணடிமைச் சேறெடுக்க மறந்தே போனார் என்று கூறியுள்ளார். பெண் என்பவள் பொதுவெளியில் மட்டுமல்ல வீட்டிலும் அவள்குரலை, கருத்தை ஓங்கிஒலிக்கக்கூடாது. அவள் பிறருடைய கருத்தை மட்டுமே முன்மொழிபவளாக விளங்குகிறாள். அவ்வாறு கூறினாலும் குரல்காட்டி முகம் மறைப்பவளாகவே இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் எழுதப்படாத நீதியாகிறது. காரணம் திருமணம் முடித்தவுடன் பெண் என்பவள் கட்டியவனுக்கும் அவனின் உறவுகளுக்கும் உரிமையாகிறாள் என்ற எண்ணம் பெண்ணைப் பெற்றவர்களுக்கே ஆழமாகப் பதிந்திருக்கும் பொழுது புகுந்த வீட்டில் அவள் அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கப்படாதவளாகவே இருக்கின்றாள். ஆணுக்கு உறவுகள் உண்டு.பெண்ணுக்கும் உறவுகள் உண்டு. ஆணுக்கு உறவுகள் பிரச்சினைகள் ஆவதில்லை. அவனைச் சிறுமைப்படுத்துவதில்லை. அவன் மதிப்பு,மரியாதைகளை அது நிலைநிறுத்துகின்றன. பெண்ணுக்கோ அவளால் சுமக்க முடியாத பாரமாக எல்லா உறவுகளும் அவளைக் காலகாலமாக அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப்படுத்துவதில்லை. அவளைப் பிணைத்திருக்கும் சங்கிலியாய் உறவுகள் இருக்கின்றன.அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது விதி. அவ்வுறவு கணவனாகவும் இருக்கலாம்(3)
பாகப்பிரிவினையும் பாசப்பிரிவினையும்
உலகம் தோன்றிய நாள்முதல் மண்ணையும் பெண்ணையும் பெறுவதற்கு இடையறாத போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்விரண்டு வளத்தையும் பெறுவதற்கு முதலில் இல்லத்தில் இருந்துதான் தொடங்;குகிறது. குறிப்பாக மண் எனும் நிலத்தைப் பெறுவதற்கு அண்ணன் தம்பியாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாய் இருந்தவர்கள் பங்காளிகளாக மாறி இவ்விருவரோடு இணைந்த குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாதபடி பெரும்பிரிவினை ஏற்படுகிறது. இச்சொத்துக்களையும் அதனால் வரக்கூடிய பிரச்சினைகளையும் வைத்தே “ஐந்துவயதில் அண்ணன் தம்பி பத்துவயதில் பங்காளி” என்ற சொலவடையே உருவாகியுள்ளது. ஒருதாய் வயிற்றில் பிறந்து ஒன்றாகவே உண்டு உறங்கியவர்கள் பாகப்பிரிவினையின்போது முன்னர் வாழ்ந்த ஒற்றுமையினை மறந்து வாழ்வின் இறுதிவரை சொத்திற்காகப் பேசாது முரண்பட்டு மடிகின்றனர். இந்த உறவுச்சிக்கலை ‘கறுப்புவெள்ளைக் கல்வெட்டு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை பின்வருமாறு பாடுகிறது
கதர்வேட்டி
காமராசர் சட்டையில் தாத்தா
காஞ்சிப்பட்டு
கல்பதித்த அட்டிகையோடு பாட்டி
பூப்போட்ட சேலை
புளியம்பூ இரவிக்கையில்
பெரிய அத்தை
ரெட்டைசடை தாவணி
வாத்துச் சங்கிலியோடு
சின்ன அத்தை
எம்ஜிஆர் மீசை
வலதுகையில் கடிகாரமென
பெரியப்பா
சிவாஜி கர்லிங்
சில்க்சட்டை
பெல்பாட்டம் பேண்ட் சகிதம்
சித்தப்பா
காரைவீட்டில் கல்வெட்டாய் மிளிர்ந்த
கருப்புவெள்ளைப் புகைப்படம்
இப்போதும் இருக்கலாம்
பாகப்பிரிவினையோடு
பந்தப்பிரிவினையும் நிகழ்த்திப்போன
ரத்தத்தின் ரத்தங்களின்
எவர்வீட்டுப் பரணிலாவது (4)
என்ற கவிதையில் தான்வாழ்ந்த நினைவின் சுவடுகள் வெறும் புகைப்படத்தில் சாட்சி சொல்கிறது. நியாபகங்கள் அனைத்தும் தின்றுதீர்த்த நினைவின் மிச்சங்களாய் பரணில் பாய்கொண்டுள்ளது உறவுகள். ஆக சொத்துக்களே சொந்தங்களைப் பிரிக்கச் செய்யும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. எனவே உறவுச்சிக்கல்கள் நிரந்தனமானவை. விட்டுக்கொடுத்தல், கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடுதல் இன்றி உறவுகள் நீடிக்காது (5)
விளிம்பில் சுடரும் உறவுகள்
நம்முடைய நெருங்கிய இரத்தசொந்தங்களை விட அவ்வப்பொழுது நம்இல்லத்திற்கு வரும் உறவினர்களை சற்றுக்கூடுதலாக கவனித்துக்கொள்வோம். உபசரிப்பும் மரியாதையும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். நெருங்கிய இரத்தசொந்தங்கள் இந்த உறவினர்களுக்குக் காட்டும் கூடுதல் மரியாதையைக் கண்டு, ஏதாவது ஒருநாள் தானே இவர்கள் வருகின்றனர். ஆகையால் இதிலொன்றும் தவறில்லை என நினைப்பின் நலம். அவ்வாறின்றி இன்று வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர். நமக்கு அவ்வாறு கொடுக்கவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பின் இரத்தசொந்தங்களின் பிணைப்பு கேள்விக்குறியாக மாறிவிடும்.
இவ்வாறு மனம் மாறுபாட்டுக்கான சூழல் எது என்ற கேள்விக்கு வித்தான காரணத்தைக் கேட்பின், என்றாவது ஒருநாள் வரும் விருந்தின் உறவுகளை நாம் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மனம்மாறுபடுவர். அந்த வருத்தமும் கோபமும் நம்மை அடிக்கடி பார்க்காமையால் நெடுநாள் நீடித்து ஒருநாள் உறவே முறிந்து போவதற்கான காரணியாகிவிடும். இரத்தஉறவுகளின் கோபம் அப்படியல்ல. அவர்களை அடிக்கடி பார்ப்பதனால் கோபதாபங்களைப் பேசித்தீர்த்து இணைந்துகொள்ளலாம். அதிகத்தொடர்பில்லாமல் இருக்கும் உறவுகளிடம் அதிக கவனம் செலுத்தித் தக்கவைப்பதே பெரும்போராட்டம் என்ற அடிப்படையில் அமைந்த கவிதையாகப் பின்வரும் கவிதை அமைந்துள்ளது,
வீட்டிற்கு உள்ளே ஏற்றும்
விளக்குகளைவிட
வெளியே வைக்கும்
விளக்குகள் மீதுதான்
கவனம் அதிகமாக இருக்கிறது.
அறைக்குள்
நிதானமாக எரியும் விளக்குகள் பற்றி
கவலையே இல்லை
வாசலில் காற்றுக்கும் தூறலுக்கும்
சலனமடையும் தீபத்தை
கரம்குவித்துப் பாதுகாப்பதிலேயே
மனம் அழுந்தித் தவிக்கிறது
மனதிற்குள் ஒட்டாமல்
விளிம்பில் சுடர்கின்ற உறவுகளையும்
இப்படித்தான்
போராடித்தக்கவைத்துக்கொள்ள
வேண்டியதாய் இருக்கின்றது
வாழ்வில்! (6)
என்ற கவிதையில் காற்றுக்குச் சலனமடையும் தீபத்தை விளிம்பில் சுடர்கின்ற உறவுகளோடு பொருத்தியுள்ளார் கவிஞர். நாம்செய்யும் செயல்களில் குற்றத்தைக் கண்டுபிடித்து அதன்மூலம் பிரச்சினை செய்து பிரியும் உறவுகளை எவ்வகையிலேனும் தம்மோடு இணைத்துக்கொள்ளத் துடிக்கும் மனம் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது வெள்ளிடைமலை. அவ்வாறு ஏன் போராடி உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்? தக்கவைத்துக் கொள்வதற்கான காரணங்கள் என்ன? என ஆராயும்பொழுது நம்இல்லத்தின் சுகதுக்கங்களில் பெரும்பங்கு எடுத்துக்கொள்வதுடன் சில,பல நாட்கள் தங்கியிருந்து நமக்கு பக்கபலமாக இருப்பர். “நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கின்றது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறைப் பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.”(7).அதனால்தான் நமக்குக் கேடுகள் நினைக்கும் உறவினர்கள் இருப்பினும் இறுக்கிப்பிடித்துத் தக்கவைத்துக் கொள்ள மனம்விழைகிறது.
அம்மாவின் உலகம்
எல்லோருக்கும் அம்மாதான் உலகம். பல துன்பங்களுக்கு இடையில் நமை ஈன்றெடுத்தவள் தாயல்லவா? அவள் இயல்பான கருணையும் அர்ப்பணிப்பும் கொண்டவள். அதனாலேயே அனைவராலும் விரும்பப்படுகிறாள், மதிக்கப்படுகிறாள். இல்லத்தினுடைய ஒப்பற்ற செல்வமாகவும் கருதப்படுவள் தாயே! அதனால்தான் தாயிறந்த இல்லம் ஒளியில்லா இல்லமாகிறது. தந்தையின்றி இருந்தாலும் ஒருகுழந்தை மனரீதியாக நன்றாக வாழ்கிறது. ஆனால் தாயில்லாக் குழந்தை மன,உடல் ரீதியல் நலிவுற்று உணவுக்கும் உணர்வுக்கும் போதாமையான பற்றாக்குறையில் வாழ்கின்றது. எனவேதான் மக்கள் வழக்காறுகளில்கூட ‘தாயில்லாப்பிள்ளை போல’ அமைதியாக இருக்கின்றது என்கின்றனர். ஒரு தாயானவள் இல்லத்தில் இருப்பின் அவளால்தான் அனைத்தும் இயங்குகிறது என நினைப்பாள். இது ஒருவகையில் தன்னைக்குறித்தான உயர்வுமனப்பான்மையின் காரணமாகும். இச்சிந்தனை வயப்பட்ட பெண்கள் இல்லத்தில் உள்ளோர்க்கு, குறிப்பாகத் தன்கணவனிடம் தான், தன்சுயம், சுதந்திரம் என அனைத்தையும் தொலைத்தது தெரியாமல் பெருமை பேசிக்கொண்டிருப்பர். இதை,
அவளே உலகம் என்று
வாழ்ந்துவிட்டார் அப்பா
என்ற பெருமை
அம்மாவுக்கு
அம்மாவின் உலகத்தையும்
அபகரித்துக் கொண்ட
அப்பாவின் லாவகம்
ஒருபோதும் புரியப்போவதில்லை
அவளுக்கு! (8)
என்ற கவிதையில் தான் அடிமைப்பட்டது தெரியாமல் எப்பொழுதும் தன்னைச்சார்ந்தே வாழ்வதாய் நினைத்து தன்வாழ்வின் சுதந்திரத்தைத் தொலைத்த பேதை கூறுவதாய் இக்கவிதை அமைந்துள்ளது. உணவுகள் பரிமாறுவதற்கும் துணிகள் துவைத்து உலர்;த்தி மடித்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பதற்கும் குற்றேவல் செய்வதற்கும் தன்னை வேலைக்காரியாய் நினைத்து வேலைவாங்கியது தெரியாமல் எல்லாவற்றுக்கும் ‘நான்தான் வேண்டும’; என்று அறியாமைப் பெருமையும் அடிமைப் பெருமையும் பேசும் பெண்கள் இவ்வுலகில் உண்டென்பதை இக்கவிதை உணர்த்தியுள்ளது.
எனவே, இங்கு ஆண்பெண் திருமணம் என்பது இருவரும் இணைந்து சமமாக வாழ்வதற்கே. ஆனால் இங்கு வாழ்தல் என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகின்றது. திருமணம் என்பது ஆணுக்குப் பணிவிடை செய்வதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்வதும் என்றாகிறது. திருமணத்திற்கு முன்புவரை தனக்கான உலகம் என்று சுதந்திரமாக வாழ்ந்தவள், திருமண நிகழ்வு முடிந்தவுடன் பிறர்நலம் பேணுதலிலும் எல்லோருக்கும் பணிவிடை செயதலிலுமே தன் விருப்பத்தைத் தொலைத்தவளாக இருக்கிறாள் தன்னை அறியாமலே. இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கின்றது. மனங்கள் ஒத்துவாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு வேண்டாத குணங்களாக, ”நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடைமையை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்” (தொல்.1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார் (9).
முடிவுரை
இங்கு உறவுச்சிக்கல்கள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. மனிதத்தன்மைக்கு ஆறறிவு தேவையில்லை. மனதில் கருணையும் உதவக்கூடிய எண்ணமும் இருந்தால் போதுமானது. இதையே பலசமயங்களில் மனிதனைத்தாண்டி விலங்குகள்கூட ஒன்றையொன்று காப்பாற்ற முனைவதில் அறியமுடிகின்றது. ஆனால் உறவுச்சிக்கல் என்பது ஆறறிவுக்கே உரிய நுண்ணிய விரிசல்களையும் மனவேறுபாடுகளையும் கொண்டு விளங்குவது. இது அவரவர்களின் வாழ்ந்த சூழல்களும் கற்ற அனுபவங்களும் ஒவ்வொருவருக்கும் தனித்த கருத்துவேறுபாடுகளை உண்டாக்குகின்றன. இதனால்தான் ஓயாத சண்டைகளும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்படுகின்றன. இங்கே உறவுகளுக்கான சிக்கல்கள் எனும்பொழுது ஏமாற்றப்படுவதும் பண்பாட்டின் காரணமாக ஏமாறுவதும் பெண்களே. ஓர்இடத்தில் சொல்லற்றவர்களாக, மற்றொரு இடத்தில் இறப்பின் சடங்குகளே காட்சிப்பொருளாக, வேறொரு இடத்தில் பணமே பாசத்தைத் தீர்மானிப்பனவாக, சிற்சில இடங்களில் உறவுகளைத் தக்கவைக்க மேற்கொள்ளும் போராட்டமாக, பலஇடங்களில் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தன்னுடைய வாழ்வைத் தொலைக்கும் இடமாக என எல்லா இடங்களிலும் அவரவர் செய்வது அவரவர் நியாயமே ‘தான்’ எனும் சிந்தனையே மனிதத்தை நிலைநிறுத்தும் மையப்புள்ளி எது எனத்தெரியாது ஒவ்வொரு இடமாக அது நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இனியும் நடந்துகொண்டே இருக்கும். காரணம் ‘தான்’ இல்லையெனில் உலகம் நகர்வதற்கும் இலக்கியம் உருவாவதற்கும் காரணி இல்லாது போய்விடும்.
மேற்கோள்
1.அய்யப்ப பணிக்கர் கவிதைகள்.
2.நா.முத்துக்குமார் – கணையாழி.
3.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.
4.கறுப்பு வெள்ளைக் கல்வெட்டு, ஆனந்தவிகடன், சொல்வனம். ப.20
5.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.
6.தி.கலையரசி,ஆனந்தவிகடன், சொல்வனம்.ப.26
7.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.6.
8.அ.சீனிவாசன் ஆனந்தவிகடன் சொல்வனம் 23.10.2024.
9.சங்கஇலக்கியத்தில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத்திறனும், thamizhiyal.com. 1.8.2020, முனைவர் ஆ.மணவழகன், உதவிப்பேராசிரியர், சமூகவியல், கலை(ம)பண்பாட்டுப்புலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.பரமசிவம்
தமிழ்இணைப்பேராசிரியர்
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி
திண்டல், ஈரோடு – 638 012.




ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


